தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மன்னிப்பு வாரியத்தின் முடிவு இறுதியானது, ஆனால் நஜிப் குற்றவாளியே’

2 mins read
0d0795bc-5a09-4542-8527-51822f8fec3a
நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்டாலும், அவருக்கு எதிரான தீர்ப்பில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் மன்னிப்பு வாரியம் முன்னாள் பிரதமர் நஜிப்பின் தண்டனையை பாதியாகக் குறைத்த விவகாரத்தில் ஜனநாயக செயல் கட்சி மக்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிப்பின் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது, இறுதியானது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

ஆனால், நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்டாலும், அவருக்கு எதிரான தீர்ப்பில் மாற்றமில்லை என்று அவர் தெரிவித்தார்.

“பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்களில் சிலர் நஜிப்பின் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டதில் கவலை அடைந்துள்ளனர் என்று அறிகிறோம்.

“ஆனால், மன்னிப்பு வாரியத்தின் முடிவு இறுதியானது. இதில் அமைச்சரவைக்கு எந்தத் தொடர்பும் இல்லை,” என்று திரு லோக் கூறியதாக மலேசியாகினி ஊடகம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தெரிவித்தது.

மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவு அம்னோ-பாரிசான் நேஷனல் கூட்டணி அரசில் ஜனநாயக செயல் கட்சி உடனான உறவு முறையில் பாதிப்பு இராது என்று திரு லோக் விளக்கினார். எனினும், இது அடுத்த தேர்தலில் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தமக்கு தெரியாது என்பதை திரு லோக் ஒப்புக்கொண்டார்.

இந்த பிரச்சினை குறித்து மேலும் விளக்கிய திரு லோக், நாட்டில் தற்பொழுது உள்ள சட்டப்படி, நஜிப்பை போல் எந்த ஒருவரும் தமது குற்றங்களுக்காக மன்னிப்பு கோரும் உரிமை உள்ளது என்று கூறினார்.

“இதில் நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை. அவர் இன்னமும் குற்றவாளியாகவே உள்ளார், அவர்மீதான தண்டனைதான் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது,” என்று திரு லோக் தெரிவித்தார்.

“தண்டனை குறைப்பிற்கான காரணம் மன்னிப்பு வாரியத்திற்கு மட்டுமே தெரியும்,” என்று அவர் சொன்னார்.

அத்துடன், நஜிப் மீது மேலும் பல நீதிமன்ற வழக்குகள் உள்ளதை திரு லோக் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்