கொலும்பியா, சவுத் கெரோலைனா: அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரண்டு கட்சிகளைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமாக வாக்களிப்புகள் நடத்தப்படுகின்றன.
குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சிக்கான வாக்களிப்பு சவுத் கெரோலைனாவில் நடைபெற்றது.
இதுவே அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஜனநாகக் கட்சி நடத்தும் முதல் வாக்களிப்பு.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெற்றி பெற்றார்.
வாக்குகள் எண்ணப்பட்டபோது மற்ற இரண்டு வேட்பாளர்களைவிட அதிபர் பைடன் அதிக வாக்குகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
20 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திரு பைடன் 97 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாக (ஏறத்தாழ 33,000 வாக்குகள்) தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் பைடனை எதிர்த்து டீன் ஃபிலிப்ஸ், மரியேன் வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட்டனர்.
“2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், தேர்தல் முன்னுரைப்புகள் தவறானவை என்று சவுத் கெரோலைனா வாக்காளர்கள் நிரூபித்தனர். சவுத் கெரோலைனா வாக்காளர்கள் எங்கள் பிரசாரத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டி எங்களை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றனர்.
“2024ஆம் ஆண்டில் இம்மாநில மக்கள் மீண்டும் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். மீண்டும் வெற்றிப் பாதையில் எங்களை அவர்கள் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை,” என்று அதிபர் பைடன் கூறினார்.

