மலேசியத் தடுப்புக்காவல் நிலையத்திலிருந்து தப்பிய 131 பேரில் 51 பேர் பிடிபட்டனர்

2 mins read
a7648f03-8d49-465c-b201-812f8125034d
வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய கைதிகளில் சிலரை அதிகாரிகள் பிடித்தனர். - படம்: பெர்னாமா

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள பிடோர் குடிநுழைவுத் தடுப்புக்காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய 131 பேரில் 51 பேரை மலேசிய அதிகாரிகள் மீண்டும் கைது செய்துவிட்டனர்.

பிப்ரவரி 3ஆம் தேதி காலை 6 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாப்பா, பிடோர் ஆகிய நகரங்களில் சிறப்புப் படைகள் தேடுதல் பணியில் இறங்கியதாக பேராக் மாநில காவல்துறைத் தலைவர் முகம்மது யுஸ்‌ரி ஹசான் பஸ்‌ரி தெரிவித்தார்.

இதில் 32 பேர் பிடிபட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் 30 ரோஹிங்யா அகதிகளும் இரண்டு பங்ளாதேஷியர்களும் அடங்குவர்.

“சனிக்கிழமை காலை 6 மணி அளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையொட்டி, நடவடிக்கையில் இறங்கினோம். அதன் விளைவாக தாப்பாவில் உள்ள கம்போங் பத்து மெலின்தாங்கில் இரண்டு ரோஹிங்கியர்களைக் கைது செய்தோம்.

“காலை 9.20 மணி அளவில் பிடோரில் உள்ள கம்போங் செந்தாவில் இருக்கும் செம்பனைத் தோட்டத்தில் மேலும் ஒரு ரோஹிங்கியரைப் பிடித்தோம். பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாப்பாவில் உள்ள கம்போங் சுங்கை கெனோவில் உள்ள மேட்டுப் பகுதியில் இரண்டு பங்ளாதேஷியர்கள், எட்டு ரோஹிங்கியர்களைப் பிடித்தோம்,” என்று திரு முகம்மது யுஸ்‌ரி ஜனவரி 3ஆம் தேதியன்று தெரிவித்தார்.

“மாலை 6 மணி அளவில் கம்போங் செந்தாவில் மேலும் 13 ரோஹிங்கியர்களும் 35 நிமிடங்கள் கழித்து பிடோரில் உள்ள போஸ் கெடோங்கில் மற்றொருவரையும் கைது செய்தோம். இரவு 7.25 மணி அளவில் தாப்பாவில் உள்ள கம்போங் பெர்மினில் இன்னொரு ரோஹிங்யா அகதி பிடிபட்டார்,” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 1ஆம் தேதி இரவு தடுப்புக்காவல் நிலையத்திலிருந்து 131 பேர் தப்பி ஓடினர். அவர்கள் 17 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

தப்பி ஓடிய ரோஹிங்யா அகதிகளில் ஒருவர் விபத்தில் மாண்டார்.

அந்த விபத்து வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நிகழ்ந்தது.

இதற்கிடையே, மேலும் இரண்டு பேர் பிப்ரவரி 4ஆம் தேதி காலை பிடிபட்டனர்.

இன்னும் பிடிபடாதவர்கள் தாப்பா, பிடோர் ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ள வனப்பகுதிகளில் ஒளிந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது என்று திரு முகம்மது யுஸ்‌ரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்