போலி மருந்து மோசடி: இலங்கை அமைச்சர் கைது

போலி மருந்து மோசடி: இலங்கை அமைச்சர் கைது

1 mins read
1cd30792-5c45-4396-bdbe-fdf1b76133b0
கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல. - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: போலி மருந்து மோசடியில் இலங்கை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சுகாதார அமைச்சராக இருந்தபோது அரசாங்க மருத்துவமனைகளுக்கு போலி மருந்துகளை வாங்கியது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல என்னும் அவர் பிடிபட்டார்.

அவரை பிப்ரவரி 15ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் சனிக்கிழமை (பிப்ரவரி 3) உத்தரவிட்டது.

உயிர்காப்பு மருந்துகளை போலியாக வாங்கியதன் மூலம் 144 மில்லியன் இலங்கை ரூபாய் (S$620,000) அளவுக்கு மோசடி நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

“மருந்துகள் போலி என்பது தெரியாமல் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை அரசாங்க மருத்துவமனைகளில் அவை பயன்படுத்தப்பட்டன.

“அந்த மருந்துகளைச் செலுத்தியதால் நோயாளிகளுக்கு எதிர்வினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவற்றின் தரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது,” என்று விசாரணை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

போலி மருந்துகள் காரணமாக யாரும் உயிரிழந்தனரா என்பது பற்றி தெளிவான விவரம் இல்லை.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுத் துறை ரம்புக்வெலவுடன் சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பலரையும் கைது செய்தது.

போலி மருந்துகளை விநியோகம் செய்த உள்ளூர் நிறுவனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

மருந்துகள் போலி என்று தெரிய வந்ததும் அந்த நிறுவனத்திற்கு அரசாங்கம் செலுத்த வேண்டிய 960 மில்லியன் ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்