முன்னாள் சரவாக் ஆளுநரைக் காணவில்லை

முன்னாள் சரவாக் ஆளுநரைக் காணவில்லை

2 mins read
7ce5e19a-e254-4269-92cd-7c87894425a8
திரு அப்துல் தயீப் மஹ்மூத்துடன் அவருடைய மனைவி ரகத் குர்தி தயீப். - படம்: மலேசிய ஊடகம்

கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அப்துல் தயீப் மஹ்மூத்தைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இருப்பிடம் தெரியவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

திரு தயீப்பின் மனைவி அவரை மருத்துவமனையிலிருந்து கடத்திச் சென்றதாகப் பேசப்படுகிறது.

இதை அவர் மறுத்துள்ளார்.

திரு தயீப் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மருத்துவரின் ஆலோசனைகளைச் செவிமடுக்காமல் குடும்பத்தாரின் அனுமதி இல்லாமல் திரு தயீப் மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்லப்பட்டதாக திரு தயீப்பின் சகோதரர்களில் ஒருவரான முகம்மது துஃபாயில் மஹ்மூத் காவல்துறையில் புகார் அளித்தார்.

மருத்துவரின் ஆலோசனையையும் மீறி திரு தயீப்பின் மனைவியான திருவாட்டி ரகத் குர்தி தயீப், பிப்ரவரி 3ஆம் தேதி இரவு அவரை மருத்துவமனையிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றதாக புகார் செய்யப்பட்டது.

திருவாட்டி ரகத்தின் உதவியாளரும் மெய்க்காப்பாளர்களும் திரு தயீப்பை சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டு மருத்துவமனையின் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதற்குத் திருவாட்டி ரகத் இன்ஸ்டகிராம் மூலம் மறுப்பு தெரிவித்தார்.

தாதி ஒருவர் தமக்குத் தந்த குறிப்பு என்று கூறி அவர் இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்தார்.

ஆனால் அந்தக் குறிப்பு தெளிவாக இல்லை.

திரு தயீப்பைக் காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக சரவாக் காவல்துறை தெரிவித்தது.

87 வயது திரு தயீப், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சரவாக்கின் ஆளுநராக மூன்று தவணைகள் பதவி வகித்தார்.

1981ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை திரு தயீப் சரவாக்கின் முதல்வராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்