ஹெய்ட்டியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1 mins read
2bbf16a0-adb1-4791-8610-6611b9836adc
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். - படம்: ராய்ட்டர்ஸ்

போர்ட் ஆஃப் பிரின்ஸ்: மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் அரியல் ஹென்ரியின் அரசாங்கத்தை எதிர்த்து ஹெய்ட்டியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரதமர் ஹென்ரியின் ஆட்சியில் தலைநகர் போர்ட் ஆஃப் பிரின்சில் சட்டவிரோத கும்பல்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. தலைநகரில் அவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இடங்கள் விரிவடைந்துள்ளன. தலைநகர் மட்டுமல்லாது, அருகில் உள்ள வட்டாரங்களுக்கும் சட்டவிரோத கும்பல்களின் நடவடிக்கைகள் பரவியுள்ளன.

சாலையில் இருந்த கார்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ மூட்டினர். அவர்களைக் கலைக்க ஹெய்ட்டி காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

2021ஆம் ஆண்டில் ஹெய்ட்டியின் அப்போதைய அதிபர் ஜொவெனல் மோய்சி படுகொலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, ஹென்ரி இடைக்கால அதிபராக பதவி ஏற்றார்.

ஹென்ரி பதவி ஏற்றதிலிருந்து சட்டவிரோத கும்பல்களுக்கும் காவல்துறைக்கும் இடையே பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கொலை, பாலியல் வன்முறை, திருட்டு, கடத்தல், தீ மூட்டுதல் போன்றவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“ஹெய்ட்டி மக்களுக்காக பிரதமர் ஹென்ரி ஒன்றும் செய்யவில்லை. நாடெங்கும் பாதுகாப்புப் பிரச்சினை நிலவுகிறது. சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

“ பிரதமர் ஹென்ரிக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஆட்சிமுறைக்கும் நாட்டு நடப்புக்கும் எதிராகப் போர்க் கொடி உயர்த்தி அவற்றை மாற்ற பாடுபடுகிறோம்,” என்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான டோமினிக் தெலெமேக், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்