தோக்கியோ: ஜப்பானில் சட்டத்திலிருந்து தப்பியோடி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சத்தோஷி கிரிஷிமா என்பவர் மீண்டும் தோன்றினார்.
இந்த விவகாரம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிஷிமா வெளிவந்த சில நாள்களுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தப்பியோடிக்கொண்டிருந்த யக்குஸா குற்றக் கும்பலைச் சேர்ந்த ஷிகெயுக்கி கின் என்பவர் பிடிபட்டார்.
பொதுவாக காலம் செல்லச் செல்ல சட்டத்திலிருந்து தப்பியோடியோரைக் கண்டுபிடிப்பது சிரமமாகும்.
கிரிஷிமா வெளிவந்த பிறகு குற்றவாளிகளின் படங்களைக் கொண்ட சுவரோட்டிகள் மீது மீண்டும் கவனம் திரும்பியது. அதனைத் தொடர்ந்து அடையாளம் தெரிவிக்கப்படாத நபர்களிடமிருந்து வந்த தகவல்களைக் கொண்டு கின் கைது செய்யப்பட்டார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று கிரிஷிமா என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆடவர் மருத்துவமனைக்குச் சென்றார். மரணம் விளைவிக்கும் வயிற்றுப் புற்றுநோய்க்குத் தான் ஆளானதாகவும் இறக்கும்போது சொந்தப் பெயரில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிரிஷிமாவின் புனைப்பெயர் ஹிரோஷி உச்சிதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாள்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். புதன்கிழமை (7 பிப்ரவரி) அவரின் உடல் எரியூட்டப்பட்டது.
அவரின் அடையாளத்தைக் காவல்துறையினர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனினும், அவர் கிரிஷிமாதான் என்பதற்கான அறிகுறிகள் மரபணுச் (டிஎன்ஏ) சோதனையில் தெரிந்தன.

