இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவடைந்தன

1 mins read
205d7cfb-a3d6-470d-ae56-f0a48f3429f1
பிப்ரவரி 10ஆம் தேதியன்று மத்திய ஜாவாவில் உள்ள சோலோ, செமாராங் நகரங்களில் இந்தோனீசிய அதிபர் தேர்தல் வேட்பாளர் கஞ்சார் பிரனோவோ பிரசாரம் செய்தார். - படம்: கஞ்சார் பிரனோவோ தேர்தல் பிரசாரக் குழு

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அதனை முன்னிட்டு நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டங்கள் பிப்ரவரி 10ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

இந்தத் தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பேசப்படுகிறது.

அவரது துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனும் சோலோ நகரின் மேயருமான திரு ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா போட்டியிடுகிறார்.

இந்தோனீசிய அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

திரு பிரபோவோவை எதிர்த்து முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அனீஸ் பஸ்வெடனும் முன்னாள் மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரனோவோவும் போட்டியிடுகின்றனர்.

நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் திரு பிரபோவோ முதலிடத்தையும் திரு அனீஸ் இரண்டாவது இடத்தையும் திரு கஞ்சார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பிப்ரவரி 14ஆம் தேதியன்று அதிபர் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. இவற்றில் வாக்களிக்க ஏறத்தாழ 205 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பிரசாரக் கூட்டத்தின் கடைசி நாளான பிப்ரவரி 10ஆம் தேதியன்று மூன்று வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்புச் சொற்கள்