மியன்மாரில் இளம் ஆண்களும் பெண்களும் கட்டாய ராணுவ சேவை செய்ய உத்தரவு

மியன்மாரில் இளம் ஆண்களும் பெண்களும் கட்டாய ராணுவ சேவை செய்ய உத்தரவு

2 mins read
75dd7309-e8bb-4d68-a759-182e4edb1198
மியன்மாரில் 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் 18 முதல் 27 வயதுக்கு இடைப்பட்ட பெண்களும் ஈராண்டுகள் வரை கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள், நாட்டில் உள்ள இளம் ஆண்களும் பெண்களும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அந்நாட்டு அரசாங்க ஊடகம் சனிக்கிழமை (பிப்ரவரி 10) அந்தத் தகவலை வெளியிட்டது.

மியன்மாரின் பல்வேறு பகுதிகளில் தன்னாட்சி கோரி ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் திணறும் ராணுவ அரசாங்கம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்கீழ், 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் 18 முதல் 27 வயதுக்கு இடைப்பட்ட பெண்களும் ஈராண்டுகள் வரை கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும்.

45 வயது வரையிலான மருத்துவர்கள் போன்ற சிறப்புத் திறனாளர்கள், மூன்று ஆண்டுகள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும்.

தற்போதைய நெருக்கடி நிலையில், இந்தக் காலகட்டம் மொத்தம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதுமுதல் அங்கு போராட்டமும் குழப்பமும் நிலவிவருகின்றன.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஆயுதமேந்திய போராளிகள் குழு மற்றும் ஜனநாயக ஆதரவுக் கூட்டணியுடனான மோதல்களில் ராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பில் சிரமத்தை எதிர்கொள்ளும் மியன்மார் ராணுவம், போர்ப் பயிற்சி பெறாத ஊழியர்களையும் களத்தில் இறங்கிப் போரிட வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.

“நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கடமை ராணுவ வீரர்களுக்கு மட்டுமானதன்று. குடிமக்கள் அனைவருக்கும் அந்தக் கடமை உள்ளது. எனவே, அனைவரும் கட்டாய ராணுவ சேவை தொடர்பான சட்டத்தைப் பெருமையுடன் மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களின் பேச்சாளர் ஸாவ் மின் டுன், அரசாங்க ஊடகத்திடம் தெரிவித்தார்.

மியன்மாரில் கட்டாய ராணுவ சேவை தொடர்பான சட்டம் 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதுதான் அது நடப்புக்கு வந்துள்ளது.

கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தை மீறுவோர்க்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்ராணுவம்இளையர்