ரஷ்ய அதிபர் தேர்தலில் புட்டினையும் சேர்த்து நால்வர் போட்டி

1 mins read
295d11fd-fe03-4b4f-812e-4fd168ca77b3
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்த மாதம் (மார்ச் 2024) நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் சேர்த்து மொத்தம் நால்வர் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்றனர்.

வேட்பாளர்களாகக் களமிறங்கும் மற்ற மூன்று அரசியல்வாதிகளும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரை ஆதரிப்பவர்கள் என்று ‘டாஸ்’ செய்தி நிறுவனம் பிப்ரவரி 11ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது.

போரை எதிர்த்துக் கருத்துரைத்த போரிஸ் நடீஸ்டின், 60, அதிபர் தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 8ஆம் தேதி, மத்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அவரது வேட்பு மனுவை ஆதரித்துக் கையொப்பம் பெறுவதில் சில விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக அது கூறியது. ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவிருப்பதாக திரு நடீஸ்டின் கூறினார்.

71 வயதாகும் அதிபர் புட்டின், ஆளும் கட்சி சார்பாகப் போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் அவர் எளிதில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்