தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஆடவர் கைது

1 mins read
d169de25-87b4-4ec0-acff-3853f389df52
அவசரத் தடத்தில் வழி மறித்த காரணத்தால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. - படங்கள்: இணையம்

ஜோகூர் பாரு: ஜோகூரில் நடந்த சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர், 40 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் பதிவான காரை ஓட்டிய ஆடவர், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு காரின் சன்னலை உடைத்ததாக முன்னர் கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அந்த காரின் உரிமையாளரைக் காவல்துறையினர் தேடி வருவதாகச் செய்தி வெளிவந்தது.

இதையடுத்து, பாகாங்கின் கெந்திங் மலையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 12) அதிகாலை 3.30 மணியளவில் ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஜோகூரின் தலைமைக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

பிப்ரவரி 14 வரை சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விரைவுச்சாலையின் அவசரத் தடத்தில் சந்தேக நபரின் காரை, பாதிக்கப்பட்டவரின் கார் வழி மறித்ததாகவும் அதிருப்தியில் சந்தேக நபர் தன் காரை விட்டு இறங்கி மற்றொரு காரின் பின்பக்கச் சன்னலை உடைத்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் ஆணையர் குமார்.

இதற்கிடையே, அந்தச் சாலை வன்முறைச் சம்பவத்தைக் காட்டும் 54 வினாடி காணொளி, தொடர்ந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்