இந்தோனீசிய தேர்தல் பற்றிசர்ச்சைக்குரிய ஆவணப்படம்

2 mins read
592963f9-583f-4e3a-845c-c867b4b34a8d
இந்தோனீசியாவின் டிபோக் மாவட்டத்தில் விநியோகிப்பதற்காக வாக்குப் பதிவு பெட்டிகளை தூக்கிச் சென்ற ஊழியர்கள் - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி புதன்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் பற்றிய ஆவணப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஆவணப் படம் அவதூறானது என்று பிரபாவோ பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.

‘டர்ட்டி வோட்’ எனும் இரண்டு மணிநேர ஆவணப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது. இது, 24 மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

தேர்தல் நடைமுறைகளில் மோசடி நடைபெறலாம் என்று பல்வேறு சட்ட நிபுணர்கள் இதில் கருத்துரைத்துள்ளனர்.

அதிகாரிகள் நியாயமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் திரு பிரபாவோக்கும் அவருடன் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மூத்த மகன் ஜிப்ரான் ராக்காபூமிங் ராக்காவுக்கும் ஆதரவாக அவர்கள் செயல்படுவார்கள் என்றும் ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டர்ட்டி வோட்’ ஆவணப்படத்தை சமூக ஆர்வலரும் புலனாய்வு செய்தியாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான டந்தி டிவி லக்சோனோ இயக்கி வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட ‘செக்ஸி கில்லர்ஸ்’ என்ற ஆவணப்படத்துக்கு இவர் பெயர்போனவர். அரசியல் கட்சிக்கும் நிலக்கரி சுரங்கத் தொழிலுக்கும் இடையே கூட்டு சதி உள்ளது என்று இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் வெளியான ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் உண்மையில்லை என்று பிரபாவோ-ஜிப்ரான் பிரசாரக் குழுவின் துணைத் தலைவர் ஹபிபுரோகுமான் கூறியுள்ளார்.

“அதில் தெரிவிக்கப்பட்டுள்ள எல்லாமே அவதூறானது. இது, அனுமானத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமான உண்மையில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் சுமார் 205 மில்லியன் இந்தோனீசியர்கள் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர்.

திரு விடோடோ இரண்டு தவணைக் காலம் அதிபராக இருந்துள்ளதால் அவர் 3வது முறையாக போட்டியிட அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை.

முன்னாள் ஜகார்தா ஆளுநர் அனிஸ் பஸ்வெடான், மத்திய ஜாவா முன்னாள் ஆளுநர் கஞ்சார் பிரனோவோ ஆகிய இருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இதர இரண்டு வேட்பாளர்கள் ஆவர்.

குறிப்புச் சொற்கள்