நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிப்ரவரி 12ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
சுரங்க ரயிலிலும் மவுண்ட் ஈடன் ரயில் நிலையத்தின் தளமேடையிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மாண்டதாகவும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் நியூயார்க் காவல்துறை தெரிவித்தது.
துப்பாக்கிக்காரனைக் காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
வடதிசை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் பதின்மவயதினரைக் கொண்ட இரண்டு கும்பல்கள் கைகலப்பில் ஈடுபட்டதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்தது.
கைகலப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் துப்பாக்கியை வெளியே எடுத்துச் சுட்டதாக அறியப்படுகிறது.
ரயிலில் இருந்தபோது அவர் ஒருமுறை சுட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால், துப்பாக்கியால் சுடப்பட்டபோது அந்த ஆறு பேரும் ரயில் நிலையத்தின் தளமேடையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் 34 வயது ஆடவர் மாண்டார். மற்ற ஐவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் 14 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் நான்கு ஆடவர்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.