பிப்ரவரி 14ஆம் தேதியன்று இந்தோனீசிய அதிபர் தேர்தல்

பிப்ரவரி 14ஆம் தேதியன்று இந்தோனீசிய அதிபர் தேர்தல்

2 mins read
4d6017b2-5715-4529-95e3-a703f06d55e4
விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

இதுவே உலகில் நடைபெறும் மிகப் பெரிய ஒரு நாள் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தேர்தலுக்காக இந்தோனீசிய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

ஏறத்தாழ 25,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரங்களிலிருந்து தொலைதூரம் உள்ள கிராமங்களுக்குப் படகுகள், ஹெலிகாப்டர்கள், மாட்டு வண்டிகள் ஆகியவை மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தோனீசியாவின் அதிபராக ஜோக்கோ விடோடோ பதவி வகித்தார்.

அவரது ஆட்சியில் இந்தோனீசியப் பொருளியல் சீராக வளரச்சி கண்டதுடன் நாடு நிலைத்தன்மையுடன் இருந்தது.

ஏற்கெனவே, இரண்டு முறை போட்டியிட்டு இந்தோனீசிய அதிபராகப் பதவி வகிக்கும் ஜோக்கோ விடோடோ, இந்தோனீசிய அரசமைப்புச் சட்டத்தின்படி இம்முறை தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்நிலையில், இதற்கு முன்பு தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியாந்தோவை ஆதரிக்கிறேன் என்று ஜோக்கோ விடோடோ வெளிப்படையாகக் கூறவில்லை என்றபோதிலும் அண்மைக் காலமாக அவருடன் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

இதுவே திரு பிரபோவோவுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிபர் வேட்பாளராகக் களமிறங்கும் திரு பிரபோவோவின் துணை அதிபர் வேட்பாளர், ஜோக்கோ விடோடோவின் மகனான ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா ஆவார்.

இதனால், ஜோக்கோ விடோடோவுக்கு எதிராக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

பதவிக் காலம் முடியப்போகும் நேரத்தில் அரசியலில் ஜோக்கோ விடோடோ தலையிடுவதாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, வாரிசு அரசியலை அவர் நிலைநாட்டுவதாகக் குறைகூறப்படுகிறது.

அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோ, முன்னாள் மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரனோவோ, முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அனீஸ் பஸ்வேடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தல் தொடர்பாக இரண்டு கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன.

இரண்டிலும் திரு பிரபோவோ வெற்றி பெறுவார் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்