ஜோகூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண உயர்நிலைச் சந்திப்பு

ஜோகூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண உயர்நிலைச் சந்திப்பு

தமிழ்முரசு

13 Feb 2024 - 4:30 pm

1 mins read

இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் பாருவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண விரைவில் புத்ரா ஜெயாவில் இரண்டு உயர்நிலை சந்திப்புகள் நடத்தப்படும் என ஜோகூர் மாநில செயற்குழு உறுப்பினரான முகமது ஃபஸ்லி முகமது சலே தெரிவித்தார்.

அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தலைமையில் முதல் உயர்நிலை சந்திப்பு பிப்ரவரி 29ஆம் தேதி நடைபெறும் என அவர் மேலும் கூறினார்.

போக்குவரத்து பிரச்சினைகளை ஆய்வு செய்ய போக்குவரத்து அமைச்சின் ஆதரவுடன் மாநில அரசு பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் இஸ்கந்தர் வட்டார மேம்பாட்டு ஆணையம், நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இது குறித்துச் சந்திப்பு நடத்தி வருவதாகவும் திரு முகமது சலே எடுத்துரைத்தார்.

அனைத்து துறைகளின் கருத்துகளையும் முதல் சந்திப்பின்போது போக்குவரத்து அமைச்சரிடம் சமர்ப்பிக்க தொகுத்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் உயர்மட்ட சந்திப்பு மார்ச் 6ஆம் தேதி துணைப் பிரதமர் டாக்டர் அகமது ஸாஹித் ஹமிடி தலைமையில் நடைபெறவிருப்பதாக திரு முகமது சலே தெரிவித்தார்.

“தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்கள் இலக்கு. இது நிச்சயமாக நெரிசலைக் குறைக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

“ஆனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முதலில் நாம் பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். இதில் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ரயில்கள் உட்பட அனைத்து பயண முறைகளும் அடங்கும்,” என்றார் திரு முகமது சலே.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்பொதுப் போக்குவரத்து