பெய்ரூட்: தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேலியப் படையினர் புதன்கிழமை நடத்திய தொடர் தாக்குதல்களில் நான்கு சிறார்கள் உட்பட குடிமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் எறிபடை பாய்ச்சியதில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்குப் பதிலடி தரும் வகையில் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நான்கு மாதங்களுக்கு மேலாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலிய ராணுவமும் சண்டையிட்டு வந்துள்ளன.
அல் சவானா எனும் கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மாது ஒருவரும் அவருடைய இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நபத்தியே எனும் பகுதியில் உள்ள கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாதர்கள் மூவர், சிறார்கள் இருவர், ஆடவர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டதாக அந்நகர மருத்துவமனை இயக்குநர் ஹசன் வாஸ்னி தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு எழுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் டாக்டர் வாஸ்னி கூறினார்.
இந்நிலையில் மற்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நால்வர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நடந்த சண்டையில் லெபனான் தரப்பில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

