இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம்

இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம்

1 mins read
19019450-5588-48c7-a90c-1ab1abb52dab
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்திய மாணவரான சயீது மஸாஹிர் அலியை மூவர் மூர்க்கத்தனமாகத் தாக்கினர். அவரை அந்த மூன்று பேர் சாலைகளில் துரத்தியதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் காட்டின. மஸாஹிர் அலி படுகாயம் அடைந்தார். - படம்: இந்திய ஊடகம்

வாஷிங்டன்: அண்மையில் அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.

இதற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இனம், பாலினம், போன்ற பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடத்துவது மன்னிக்க முடியாதது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உத்திபூர்வத் தொடர்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

இத்தகைய செயல்களை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றார் அவர்.

இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கவும் முறியடிக்கவும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்திய மாணவர்களைத் தாக்கியவர்களுக்குத் தகுந்த தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்ய அந்தந்த மாநில அரசுகளுடன் அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் இணைந்து செயல்படுவதாக அவர் உறுதி அளித்தார்.

பிப்ரவரி 4ஆம் தேதியன்று சிக்காகோவில் இந்திய மாணவரான சயீது மஸாஹீர் அலி மிகவும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டார். அதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சிக்காகோ சாலைகளில் அலியை மூவர் துரத்தியதை சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் காட்டின.

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் ஒஹாயோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரில் இந்திய மாணவரான ஸ்‌ரேயாஸ் ரெட்டி மர்மமான முறையில் மாண்டு கிடந்தார்.

அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவரான நீல் ஆச்சார்யாவைப் பல நாள்களாகக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதியன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்