கீவ்: உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள அவ்தீவ்கா நகரிலிருந்து அந்நாட்டுப் படைகள் பின்வாங்கியுள்ளன.
இந்தத் தகவலை உக்ரேனின் புதிய ராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியி தெரிவித்தார்.
ரஷ்யப் படைகள் அவ்தீவ்கா நகரை நெருங்கிவிட்டதாகவும் உக்ரேனியப் படைகள் பின்வாங்கிவிட்டதால் அவை அந்நகரை கூடிய விரைவில் கைப்பற்றிவிடும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்யப் படைகள் உக்ரேனின் பக்முட் நகரைக் கைப்பற்றின.
அதற்குப் பிறகு இதுவே ரஷ்யாவுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்று கூறப்படுகிறது.
போதுமான ராணுவ வீரர்கள் இல்லாததாலும் ஆயுதப் பற்றாக்குறையாலும் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்தது.
அமெரிக்காவிலிருந்து ராணுவ உதவி உக்ரேன் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரேன் கூறியது.
இந்நிலையில், அவ்தீவ்காவிலிருந்து பின்வாங்கி அதைவிட முக்கியமான பகுதிகளைத் தற்காக்க உக்ரேனியப் படைகள் தயாராகி வருவதாக ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியி தெரிவித்தார்.

