சிட்னியில் கூடுதல் இடங்களில் கல்நார் பாதிப்பு

1 mins read
d3be5675-c38e-4ecd-9d1c-fbb5ead96ab7
சிட்னில் உள்ள பொது இடங்களில் கல்நாரை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: இணையம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மேலும் பல இடங்களில் கல்நார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூங்காக்கள், விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்களில் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் தழைக்கூளத்தில் கல்நார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கல்நாரை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

சிட்னியின் பொது இடங்களில் கல்நார் பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

விளையாட்டு மைதானம் ஒன்றில் கல்நார் பாதிப்பு இருப்பது தெரியவந்தவுடன் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

பிறகு பூங்காக்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட தழைக்கூளங்களில் கல்நார் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அந்தப் பூங்கா நிலத்தடி சாலைச் சந்திப்புக்கு மேல் அமைக்கப்பட்டது.

கல்நார் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட பூங்காக்களைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டன.

கல்நார் பாதிப்பு தொடர்பான விசாரணை சிட்னியில் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 32 இடங்களில் கல்நார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நகர அதிகாரிகள் பிப்ரவரி 17ஆம் தேதியன்று உறுதி செய்தனர்.

பாதிக்கப்பட்ட இடங்களில் பள்ளிக்கூடம் ஒன்றும் இரண்டு குடியிருப்புப் பேட்டைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி பல்கலைக்கழகத்திலும் கல்நார் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதை உறுதி செய்ய சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

கல்நார் இழைகளை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிப்பும் புற்றுநோயும்  உண்டாகக்கூடும் என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்