தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முகைதீன்: பெர்சத்து கட்சிக்குப் புதிய தலைவர் தேவை

1 mins read
95916c48-c180-4e5e-b97b-b42e27c536bc
பெர்சத்து கட்சித் தலைவர் முகைதீன் யாசின். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பெர்சத்து கட்சிக்கு விரைவில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் தற்போதைய தலைவர் முகைதீன் யாசின்.

தாம் இல்லாமல் பெர்சத்துவால் சீராக இயங்க முடியாது என்று கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறி வருவதை முன்னாள் மலேசியப் பிரதமரான திரு முகைதீன் மறுத்தார். கட்சியை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல நம்பகரமான இளம் தலைவர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“என்னால் அதிக காலம் தலைவராக இருக்க முடியாது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

“இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கலாம். தேவைப்படும் வரை நான் பொறுப்பில் இருப்பேன்.

“நிச்சயமாக அதிக காலத்துக்கு நான் பதவி வகிக்கமாட்டேன். ஜனநாயக முறையில் பெர்சத்து கட்சியில் மாற்றம் வரும்,” என்றார் திரு முகைதீன்.

சினார் ஹரியான் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் பேசினார்.

பெர்சத்து கட்சி உறுப்பினர்களுக்கிடையே விரிசல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் திரு முகைதீனிடம் கேட்கப்பட்டது.

கட்சிக்குள் விரிசல் ஏதும் இல்லை என்றும் வெறும் கருத்து வேறுபாடுகளே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில வேளைகளில் தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக கருத்து வேறுபாடுகள் எழும் என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்