சோல்: தென்கொரிய அரசாங்கம், மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்ப்பு ஒதுக்கீட்டு உச்ச வரம்பை 2,000ஆக உயர்த்துவதாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அறிவித்தது.
அரசாங்கத்தின் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 19ஆம் தேதி நாட்டின் மிகப்பெரிய ஐந்து மருத்துவமனைகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.
இதனால் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர கண்காணிப்புப் பிரிவு உள்ளிட்ட பல மருத்துவ சேவைகள் பாதிக்கப்படக்கூடும். மேலும் சுகாதாரத்துறை பெரிய அளவில் முடங்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பதவி விலகவிருப்பதாக தெரிவித்துள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தென்கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ கடந்த ஞாயிற்றுக்கிழமை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் பதவி விலகும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும், தென்கொரிய மருத்துவர்களைப் பிரதிநிதிக்கும் அங்குள்ள கொரிய மருத்துவ சங்கத்தினரும் மருத்துவ மாணவர்களும் அரசாங்கத்தின் திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் வேலையை விட்டுச் செல்வது, அல்லது வேறு வகையில் அரசாங்கத் திட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மருத்துவச் சேவைகளில் முடக்கம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது பொதுமக்களே என்று கவலை தெரிவித்துள்ளார் பிரதமர் ஹான்.
மருத்துவர்கள் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகுவதால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அத்துடன் சுகாதாரத்துறையில் பெரிய அளவில் முடக்கம் ஏற்படும். எனவே, இதுபோன்ற ஒட்டுமொத்த பதவி விலகல் நடப்பது நல்லதல்ல என்று பிரதமர் ஹான் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.