தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டத்திற்கு குறுக்கே நிற்கும் நிதிப் பிரச்சினை

2 mins read
1a0b0acd-7eff-4d86-a19d-2c24e9fdb48b
கோலாலம்பூரில் இடம்பெற உள்ள பண்டார் மலேசியா அதிவேக ரயில் நிலையம் ஓவியரின் கைவண்ணத்தில். - படம்: எடல்மன்

கோலாலம்பூர்: சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையிலான அதிவேக ரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்திற்குப் புத்துயிரூட்ட மலேசிய அரசாங்கம் முன்வந்தாலும் அதற்கு நிதிப் பிரச்சினை குறுக்கே நிற்பதாக சம்பந்தப்பட்ட தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

திட்டத்தை ஏலக்குத்தகைக்கு எடுக்கும் புதிய குத்தகையாளர்கள் தங்களது பரிந்துரைப்பில் அரசாங்க நிதியைக் கோரி உள்ளனர்.

சிங்கப்பூர்-கோலாலம்பூர் திட்டத்தை மேம்படுத்தும் மற்றும் அமல்படுத்தும் பொறுப்புகளை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான MyHSR கார்ப்பரேஷன் நிறுவனம் ஏற்றுள்ளது.

மீண்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏலக்குத்தகைக் கேட்பு ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மலேசியாவையும் பிற நாடகளையும் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் குத்தகைக்கு விண்ணப்பித்து உள்ளதாக MyHSR கார்ப்பரேஷன் கூறியது.

இருப்பினும் அந்த நிறுவனங்களின் பெயரை அது வெளியிடவில்லை.

அரசாங்க நிதி அல்லது நிதிக்கான உத்தரவாதம் எதனையும் எதிர்பாராமல் முழுக்க முழுக்க சொந்த நிதியைப் பயன்படுத்தும் தனியார் துறையின் திறன் குறித்து மலேசிய அரசாங்கம் அறிய விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கம் இந்த அதிவேக ரயில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த விரும்பினாலும், 350 கிலோமீட்டர் தூரம் கொண்ட ரயில் பாதை உருவாக்குவதற்கான செலவைத் தரத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

அந்த ரயில்பாதைக்கான செலவு 100 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் (S$28 பில்லியன்) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

ஏலக்குத்தகைக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாளான ஜனவரி 15ஆம் தேதியை நெருங்க சில நாள்கள் இருந்த வேளையில், ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பெனி உள்ளிட்ட ஜப்பானிய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதில் இருந்து பின்வாங்கின.

அரசாங்க நிதி ஆதரவு இல்லாமல் திட்டத்தைச் செயல்படுத்துவது ‘மிகவும் சிரமம்’ என்று அதற்கு அவை காரணம் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்