தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் இஸ்ரேல் ‘இனப்படுகொலை’ செய்வதாக பிரேசில் குற்றச்சாட்டு

2 mins read
bfc9c461-5dab-40dc-8660-bfdfba0ecec4
பிரேசிலிய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ‘இனப்படுகொலை’ புரிந்துவருவதாக பிரேசிலிய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா குற்றம் சாட்டி உள்ளார்.

யூதர்களை ஒழித்துக்கட்ட ஹிட்லர் மேற்கொண்ட பிரசாரத்தை ஒத்து இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் ஒப்பீடு செய்து விமர்சித்து உள்ளார்.

பிரேசிலிய அதிபரின் அந்தக் கருத்துகள் ‘வெட்கக்கேடானவை; கடுமையானவை’ என்று பதிலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சாடியுள்ளார்.

தொடர்ந்து, கண்டனத்தைத் தெரிவிக்க பிரேசிலியத் தூதரை தமது அரசாங்கம் அழைத்திருப்பதாகவும் திரு நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பிரேசிலிய அதிபரின் கருத்துகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள காஸா மக்கள் அனுபவித்து வரும் துயரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதாக ஹமாஸ் இயக்கம் கூறியுள்ளது.

எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க ஒன்றிய உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது திரு லூலா இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார்.

“காஸாவில் நடப்பது, படைக்கு எதிராக மற்றொரு படை நடத்தும் போர் அல்ல.

“தாக்கத் துடிக்கும் ராணுவத்துக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடையிலான போர் அது,” என்று திரு லூலா குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள்போல வரலாற்றில் வேறெங்கும் இதுவரை நடந்தது இல்லை. இருப்பினும், ஒரே ஒரு முறை, யூதர்களைக் கொல்ல ஹிட்லர் முடிவெடுத்தபோது இதேபோல நடந்தது,” என்றார்.

போரை நிறுத்த பிரிட்டிஷ் எதிர்த்தரப்பு வேண்டுகோள்

இதற்கிடையே, காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் எதிர்த்தரப்புத் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வாக்கெடுப்பை இந்த வாரம் நடத்த அவர் தயாராகி வருகிறார்.

கிளாஸ்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்காட்லாந்து தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரு ஸ்டார்மர், “எந்தவொரு சண்டை நிறுத்தமாக இருந்தாலும் அது ஒருதரப்பாக இருக்கக்கூடாது.

“இருதரப்பினரும் எல்லாவிதமான வன்செயல்களையும் நிறுத்துவதே சண்டை நிறுத்தம். உண்மையான அமைதிக்கு அது இட்டுச்செல்ல வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்