தி ஹேக்: பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வருவது குறித்த உலக நீதிமன்ற விசாரணை திங்கட்கிழமையன்று (19 பிப்ரவரி) தொடங்கியது.
நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஐக்கிய நாட்டு சபையின் ஆக உயரிய நீதிமன்றமான உலக நீதிமன்றத்தில் ஒரு வாரத்துக்கு விசாரணை தொடரும். 50க்கும் மேற்பட்ட நாடுகள் நீதிபதிகளிடம் தங்களின் வாதங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாட் அல்-மாலிக்கி உலக நீதிமன்றத்தில் பேசுவார். பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை அறிக்கை அல்லது கருத்தில்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாத கருத்தைத் தெரிவிக்குமாறு ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை, உலக நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.
முன்னதாக அப்படி தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு இஸ்ரேல் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. எனினும், காஸா போர் தொடரும் இவ்வேளையில், இந்நடவடிக்கை இஸ்ரேல் மீது அரசியல் ரீதியான நெருக்குதலை அளிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உலக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கும். அவற்றில் அமெரிக்காதான் இஸ்ரேலுக்கு ஆக அதிக ஆதரவு வழங்கும் நாடாகும்.

