ஜப்பான்: ‘நியூக்ளியர் ஃபியூஷன்’ எனப்படும் அணுக்கரு இணைவு முறையின் மூலம் வருங்காலத்தில் பாதுகாப்பான, கரிமவெளியேற்றம் அற்ற மின்சாரத்தைத் தயாரிக்க இயலும் என்று ஜப்பானிய அறிவியாலாளர்கள் கூறியுள்ளனர்.
இதன் தொடர்பில், ஜேடி-60எஸ்ஏ எனும் அணுவெப்ப ஆற்றல் சோதனை உலையில் பல மில்லியன் டிகிரி வெப்பநிலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
15.5 மீட்டர் உயரமும் 13.7 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உலையை அமைக்க 15 ஆண்டுகள் பிடித்தன.
சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு ஆற்றல் வழங்கும் அணுக்கரு இணைவு ஆற்றல் குறித்தும் பூமியில் அதை உருவாக்கும் வழிமுறைகள் குறித்தும் 1950களிலிருந்தே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வகை ஆற்றல், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களை வெளியேற்றாது என்பதுடன் அணுசக்தித் தயாரிப்பு முறைகளில் வெளியாகும் கழிவுகளையும் வெளியேற்றாது.
இது பாதுகாப்பான முறை என்பதும் விரும்பத்தகாத, கேடு விளைவிக்கும் துணைப்பொருள்கள் இதில் உருவாகமாட்டா என்பதும் இதன் சிறப்பம்சங்கள். தற்போதைய அணுசக்தித் தயாரிப்பு முறையில் துணைப்பொருள்களாக உருவாகும் சில கதிரியக்கப் பொருள்கள் மக்கிப்போக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.