தாய்மொழிப் பள்ளிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்றவையே: மலேசிய கூட்டரசு நீதிமன்றம்

2 mins read
0b58c174-767f-48c4-8584-80cf3d7c0980
மலேசிய சீனர்கள் சங்கத் தலைமைச் செயலாளர் சோங் சின் (நடுவில்), தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே சரஸ்வதி. - படம்: த ஸ்டார்
multi-img1 of 2

கோலாலம்பூர்: மலேசியாவின் தாய்மொழிப் பள்ளிகளில் சீன மொழியும் தமிழ்மொழியும் கற்பிக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது அன்று என அந்நாட்டுக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) நடந்த விசாரணையின்போது, இதன் தொடர்பில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இரு அரசு-சாரா அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.

தாய்மொழிப் பள்ளிகளில் சீன மொழியும் தமிழ்மொழியும் கற்பிக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதன்று என ஏற்கெனவே மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்றும் அதுகுறித்து இனியும் விவாதத்துக்கு இடமில்லை என்றும் அது கூறியது.

முன்னதாக, தாய்மொழிப் பள்ளிகளில் சீனமும் தமிழும் கற்பிக்கப்படும் நடைமுறை குறித்து மலாய்-முஸ்லிம் தரப்பினர் வழக்குத் தொடுத்தனர்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றமும் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது.

பின்னர், கூட்டரசு நீதிமன்றத்தில் இவ்வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது.

ஆனால், இந்த வழக்கை மேல்முறையீட்டுக்கு எடுத்துக் கொள்வதற்குப் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதிகள் அதனைத் தள்ளுபடி செய்தனர்.

இவ்வேளையில், கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மலேசிய சீனர்கள் சங்கத் தலைமைச் செயலாளர் சோங் சின் வரவேற்றுள்ளார்.

தாய்மொழிப் பள்ளிகள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே செயல்பட்டு வருவதை அவர் சுட்டினார்.

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்த விதத் தடையும் சட்டரீதியாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வழக்கை எதிர்த்து சீனப் பள்ளிகள் தொடர்பான இயக்கங்களும் தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான அரசு சாரா இயக்கங்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தன. தங்களை பிரதிவாதிகளாகவும் இந்த வழக்கில் அவர்கள் இணைந்து கொண்டனர்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக மசீச, கெராக்கான், மஇகா போன்ற அரசியல் கட்சிகளும், தனியார் இடைநிலைப் பள்ளிகளும் இணைந்திருந்தன.

குறிப்புச் சொற்கள்