ரஷ்யா சார்ந்த 500க்கு மேற்பட்ட வளாகங்கள், நிறுவனங்கள் மீது தடை விதிக்கிறது அமெரிக்கா

ரஷ்யா சார்ந்த 500க்கு மேற்பட்ட வளாகங்கள், நிறுவனங்கள் மீது தடை விதிக்கிறது அமெரிக்கா

2 mins read
38e69899-74c7-48cf-9bcb-fd317b60ddf4
ரஷ்யாவின் ராணுவ வளாகம் மீதும், மாஸ்கோவிற்குத் துணைநிற்கும் நாடுகளின் நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் நிதித் துணையமைச்சர் வாலி அடியெமோ கூறினார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஈராண்டுகள் ஆகிவிட்டதைக் குறிக்கும் வகையில், ரஷ்யா சார்ந்த 500க்கு மேற்பட்ட நிறுவனங்கள், வளாகங்கள் மீது அமெரிக்கா தடை விதிக்கவிருக்கிறது.

பிப்ரவரி 23ஆம் தேதி தடைகள் விதிக்கப்படும் என்று ராய்ட்டர்சுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி அளித்த நேர்காணலில் அமெரிக்காவின் நிதித் துணையமைச்சர் வாலி அடியெமோ கூறினார்.

நட்பு நாடுகளுடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின்கீழ், ரஷ்யாவின் ராணுவ வளாகம் மீதும் மாஸ்கோ அதற்குத் தேவையான பொருள்களைப் பெற உதவும் நாடுகளின் நிறுவனங்களின் மீதும் தடை விதிக்கப்படும் என்றார் அமைச்சர் அடியெமோ.

உக்ரேன் மீதான போருக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கும் மாஸ்கோ பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதே வாஷிங்டன் இவ்வாறு தடை விதிப்பதற்கான காரணம் என்றார் அவர்.

ரஷ்யா 2022ஆம் ஆண்டில் உக்ரேன் மீது படையெடுத்ததன் பிறகு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இதுவரை ஆயிரக்கணக்கான தடைகளை விதித்துள்ளன.

ரஷ்யா மீதான நெருக்குதலைத் தொடரும் நோக்கில் அண்மைய தடைகள் அறிவிக்கப்படுகின்றன. உக்ரேனுக்குக் கூடுதல் பாதுகாப்பு உதவிகள் வழங்கும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிக்குமா என்ற ஐயம் நிலவும் வேளையில் தடைகள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

“இந்தத் தடைகள் உக்ரேன் மீதான போரில் ரஷ்யத் தரப்பின் வேகத்தைக் குறைக்கவும் போரைத் தொடர்வதை மாஸ்கோவிற்குச் சிரமமாக்கவும் உதவும்,” என்று திரு அடியெமோ குறிப்பிட்டார்.

ஆனால் மாஸ்கோவைத் தடுத்து நிறுத்த இந்தத் தடைகள் போதாது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்