லண்டன்: இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகத்தில் வந்திறங்கிய 5.7 டன் கொக்கெய்ன் போதைப் பொருளை அந்நாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுவே பிரிட்டனுக்குள் கொண்டுவரப்பட்ட ஆகப் பெரிய அளவிலான போதைப் பொருள் சம்பவம் என்று கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட இந்த 5.7 டன் கொக்கெய்ன் போதைப் பொருளின் சந்தை மதிப்பு 450 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (S$570 மில்லியன்) என்று கூறப்படுகிறது.
இந்த போதைப் பொருள் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சவுத்ஹேம்டன் துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த வாழைப்பழ அடுக்குகளுக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய பிரிட்டனின் தேசிய குற்றவியல் அமைப்பு, இந்த போதைப் பொருள் சரக்கு ஜெர்மனியை நோக்கி செல்வதாக நம்பப்படுகிறது என்று தெரிவித்தது. இதன் தொடர்பில் அந்த அமைப்பு இதில் ஈடுபட்டுள்ள குற்றக் கும்பல் கட்டமைப்பை அடையாளம் காண தான் அனைத்துலக அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த அமைப்பு விளக்கியுள்ளது.
“இந்தப் பறிமுதல் அனைத்துலக குற்றக் கும்பல்களுக்கு ஒரு பெரிய அடி. அத்துடன், இதனால் அது பெரிய அளவிலான லாபத்தை இழந்துள்ளது,” என்று அந்த பிரிட்டிஷ் அமைப்பின் இயக்குநர் கிறிஸ் ஃபாரிமோண்ட் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

