ஸ்ரீஜெயா: சில மணி நேரம் பிச்சை எடுப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 ரிங்கிட் (S$140) பெற்று வருவதாக மலேசிய ஆடவர் ஒருவர் தெரிவித்து உள்ளார். மேலும், அவரிடம் எஸ்யுவி ஆடம்பர கார் ஒன்றும் உள்ளது.
பாகாங் மாநிலத்தின் மாரான் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஸ்ரீஜெயா இரவுச் சந்தையில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் நடவடிக்கையாக புதன்கிழமை (பிப்ரவரி 21) சோதனையில் ஈடுபட்டபோது இந்த அதிர்ச்சி கலந்த உண்மை அம்பலமானது.
அந்த இரவுச் சந்தையை மட்டும் அதிகாரிகள் ஏன் குறிவைத்து சோதனை நடத்தினர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சோதனையின்போது காணப்பட்ட ஆடவர் சாம்பல்நிற ஆடையும் குல்லாவும் அணிந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்.
காகிதப் பை ஒன்றை வைத்திருந்த அவர், அவ்வழியாகச் செல்வோர் இரக்கப்படும் அளவுக்கு நடந்துகொண்டார். அவரின் இரு கைகளும் சிறிதாகத் தோன்றின,” என்று சமூகநலத் துறை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
காகிதப் பையில் பணம் இருந்ததாகவும் அது தெரிவித்தது.
அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அவர் ஊமை மற்றும் செவிடாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கணித்தனர்.
ஆனால், அடையாளப் பத்திரங்களை அதிகாரிகள் கேட்டபோது திடீரென்று அவர் பேசினார். பத்திரங்கள் தமது காரில் இருப்பதாக ஆடவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அது எஸ்யுவி ரகத்தைச் சேர்ந்த புரோட்டான் எக்ஸ் 70 ஆடம்பர கார் என்பதும் அப்போது தெரிய வந்தது. அந்த காரின் தற்போதைய விலை 123,800 ரிங்கிட் முதல் 128,800 ரிங்கிட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
பெயர் எதனையும் தெரிவிக்காத அந்த ஆடவர், இரவுச் சந்தையில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பிச்சை எடுத்து 500 ரிங்கிட் வரை பெறுவதாகக் கூறினார்.
கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், உடற்குறை காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சமூகநலத் துறையிடம் இருந்து மாதாமாதம் 450 ரிங்கிட் நிதி உதவி பெற்று வருகிறார்.
பிச்சை எடுக்க வேண்டாம் என வாய்மொழி எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், ஆடவர் மீது நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.