சிட்னி: தொலைக்காட்சிப் படைப்பாளரையும் அவரின் காதலரையும் கொலை செய்த சந்தேகத்தின்பேரில் ஆஸ்திரேலியக் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.
இது குறித்துப் பேசிய காவல்துறை மேலாளர் டேனி டோஹர்ட்டி, 28 வயது காவல்துறை அதிகாரி இரு கொலைக் குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, கொலை செய்ததாக நம்பப்படும் இருவரின் உடல்களை சிட்னி முழுதும் மூன்று நாள்களாக தேடும் பணி இடம்பெற்றது. வார முற்பகுதியில் புறநகர் குப்பைத் தொட்டியில் ரத்தக்கறை படிந்த ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி படைப்பாளர் ஜெஸ்ஸி பேர்ட், 26, இல்லத்துக்குச் சென்றனர்.
அவருடைய வீட்டில் ஆங்காங்கே ரத்தம் சிந்திக் கிடந்தது என்றும் இதனால் ஜெஸ்ஸி பேர்ட், அவரது காதலர் தொடர்பாக ஆழ்ந்த கவலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜெஸ்ஸி பேர்டின் காதலர், லுக் டேவிஸ், வயது 29, குவான்டாஸ் விமானச் சேவையில் விமான சிப்பந்தியாகப் பணிபுரிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விருவரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. திரு பேர்டின் இல்லத்தில் காணப்பட்ட துப்பாக்கி குண்டு காவல்துறை துப்பாக்கி குண்டை ஒத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொலையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி பின்னர் காவல்துறையின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறை அதிகாரி, அண்மைய காலம்வரை திரு பேர்டுடன் உறவுமுறையில் இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த உறவு மோசமான நிலையில் முறிந்ததாகவும் கூறப்படுகிறது. திரு பேர்ட் ஆஸ்திரேலியாவின் நெட்வொர்க் டென் என்ற தொலைக்காட்சியில் படைப்பாளராக இருந்தார் என்று அறியப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) அன்று சிட்னி நகரின் புகழ்பெற்ற கடற்கரை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
காவலில் வைக்கப்பட்டுள்ள அவருக்குப் பிணை மறுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.