அமெரிக்க இரவுநேரக் கேளிக்கைவிடுதிக்குள் அனுமதி மறுப்பு; கடும் குளிரினால் இறந்த இந்திய மாணவர்

அமெரிக்க இரவுநேரக் கேளிக்கைவிடுதிக்குள் அனுமதி மறுப்பு; கடும் குளிரினால் இறந்த இந்திய மாணவர்

1 mins read
e5dd5372-9827-4592-8f1e-f0435ce28ed3
இரவுநேரக் கேளிக்கைவிடுதிக்குள் அனுமதி மறுக்கப்பட்டு வெளியே கடுங்குளிரால் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவரான 18 வயது அகுல் தவன். - படங்கள்: இணையம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இலினாய் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரான 18 வயது அகுல் தவன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று கடுங்குளிர் காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மரணம் தொடர்பாகக் கிடைத்துள்ள புதிய தகவல் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது.

சம்பவ நாளன்று அகுல் தவன் தன்னுடைய நண்பர்களுடன் இரவுநேரக் கேளிக்கைவிடுதி ஒன்றுக்குச் சென்றதாகவும் உள்ளே செல்ல அகுல் தவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெளியே கடுங்குளிரில் அவர் இருந்ததால், குளிரில் உறைந்து இறந்தார் என்றும் கூறப்படுகிறது.

அகுல் தவன் பலமுறை கேளிக்கைவிடுதிக்குள் நுழைய முயன்றதும் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்காததும் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அன்றிரவு வெப்பநிலை -2.7 டிகிரியாக இருந்தது. மறுநாள் காலை அகுல் ஒரு கட்டடத்தின் பின்னால், இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கும் அகுல் தவனின் பெற்றோர், காணாமல் போனவர்களைத் தேடுவது தொடர்பான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்