உக்ரேனுக்கு ஆதரவாக கியவ் செல்லும் மேற்கத்திய தலைவர்கள்

உக்ரேனுக்கு ஆதரவாக கியவ் செல்லும் மேற்கத்திய தலைவர்கள்

2 mins read
போர் தொடங்கி ஈராண்டுகள் நிறைவு
909a4944-6416-433b-966e-a25497cb577e
உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போரின் இரண்டாம் ஆண்டு நிறைவுறும் நிலையில் போரில் உயிர்நீத்த உக்ரேனிய வீரர்களுக்காக எழுப்பப்பட்டுள்ள சுவர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

உக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான போர் தொடுத்து ஈராண்டுகள் நிறைவுறும் நிலையில், மேற்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் சனிக்கிழமை அன்று (பிப்ரவரி 24) உக்ரேன் தலைநகர் கியவுக்கு விரைந்துள்ளனர்.

ரஷ்யா தொடுத்த இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொண்டதுடன் உக்ரேன் நாட்டுப் பொருளியலையும் சீரழித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலி, கனடா, பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் உர்சுலா வோன் டெர் லெயனுடன் போலந்து நாட்டிலிருந்து இரவுநேர ரயில் பிடித்து கியவ் சென்றதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

ராணுவ தளவாட குறைபாட்டினால் போர்முனையில் அண்மைய வாரங்களில் தோல்வியை உக்ரேன் சந்தித்து வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கியவுக்கு ஆதரவு தர தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதை தெரிவிக்கும் வண்ணம் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துரைத்த டாக்டர் வோன் டெர் லெயன், தமது கியவ் பயணம் “உக்ரேன் மக்களின் அபார எதிர்ப்பை கொண்டாடும் வண்ணம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “முன்னெப்போதையும்விட தற்பொழுது நாங்கள் நிதி, பொருளியல், ராணுவ, தார்மிக அடிப்படையில் உக்ரேன் சுதந்திர நாடாகும்வரை உறுதியாக துணைநிற்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.

இத்தாலியப் பிரதமர் திருவாட்டி ஜார்ஜியோ மெலோனியும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் உக்ரேனுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இதற்கு முன் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரேனுடன் ஏற்படுத்திக் கொண்ட பல பில்லியன் டாலர் பெறுமானமுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்தபடி அமெரிக்க டாலர் 61 பில்லியன் உதவி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இது நல்ல ஆயுதங்களுடன் போரில் இறங்கியிருக்கும் பெரிய நாடான ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் போரிட்டு வெல்வதை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஜி-7 முக்கிய ஜனநாயக நாட்டுத் தலைவர்கள் கூட்டத்துக்கு இத்தாலியப் பிரதமர் திருவாட்டி மெலோனி தலைமை தாங்கினார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்குபெற உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி-7 நாடுகளின் கூட்டத்துக்கு தற்பொழுது தலைமை ஏற்றிருக்கும் இத்தாலி இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேற்கத்திய நாடுகள் இந்தப் போரால் சோர்வடைந்துள்ளதாகவும் ரஷ்யா போரில் வெற்றி பெற்றுவருவதாகவும் எழுந்துள்ள தோற்றத்தை முறியடிப்பது அவசியம் என்று இத்தாலியப் பிரதமர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்