ஜெருசலம்: இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவை, ஹமாஸ் பிணைபிடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை கத்தாருக்கு அனுப்ப ஒப்புதல் அளித்து உள்ளது.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தவும் காஸாவில் பிணை பிடிக்கப்பட்டு உள்ளோரை விடுவிக்கவும் அந்தக் குழு பேச்சுவார்த்தையைத் தொடர அமைச்சரவை அனுமதி வழங்கியதாக இஸ்ரேலிய அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும் குறிப்பிட்டன.
முன்னதாக, பேச்சுவார்த்தை பாரிஸில் தொடங்கியபோது, மொசாட் எனப்படும் இஸ்ரேலின் வெளிநாட்டு உளவியல் பிரிவின் தலைவரும் உள்நாட்டு ஷின் பெட் பாதுகாப்புப் பிரிவின் தலைவரும் அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தாரின் நடுநிலையாளர்களைச் சந்தித்தனர்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பேராளர்கள் பாரிசில் இருந்து திரும்பிவிட்டதாக சனிக்கிழமை (பிப்ரவரி 24) மாலை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹனேபி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
“அநேகமாக, ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாவதற்கான சாத்தியம் உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பாரிஸ் பேச்சுவார்த்தை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைந்து எடுப்பதற்கு ஏதுவாக, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்று நடந்ததை விளக்குமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்னர் அவர் இதனைக் கூறினார்.
பேச்சுவார்த்தையைத் தொடர, வரும் நாள்களில் குழு ஒன்றை கத்தாருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியான ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.
காஸாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்கவும் அதற்கு ஈடாக இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கவும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை கேட்டுக்கொண்டது.
அந்தப் பரிமாற்றம் நடைபெறுவதற்கு ஏதுவாக ஒரு வார கால போர் நிறுத்தம் தேவை என்றும் அது குறிப்பிட்டது.
இதற்கிடையே, கடந்தவார இறுதியில் காஸா பகுதியில் இஸ்ரேலியப் படையினரும், பாலஸ்தீனத் துப்பாக்கிக்காரர்களும் சண்டையில் ஈடுபட்டதாக இருதரப்பும் தெரிவித்துள்ளன.
கடந்த சனிக்கிழமையில் இருந்து நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 86 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் கூறினர்.
தென் காஸாவில் நடந்த சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிர் இழந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

