வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்துக்கு வெளியே ஆடவர் ஒருவர் தீக்குளித்ததாக அந்நாட்டுக் காவல்துறை கூறியது.
இந்தச் சம்பவம் அமெரிக்க நேரப்படி பிப்ரவரி 25ஆம் தேதி பிற்பகல் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தீக்குளித்த ஆடவர் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூதரகத்துக்கு வெளியே மூண்ட தீயை அமெரிக்க அதிகாரிகள் அணைத்ததாக வாஷிங்டன் தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தீக்குளித்த ஆடவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் படுகாயம் அடைந்ததாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தூதரக ஊழியர்களுக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தூதகரத்தின் நுழைவாயிலுக்கு வெளியே நின்றுகொண்டு பாஸ்தீனம் சுதந்திர நாடாக வேண்டும் என்று முழக்கமிட்டு அந்த ஆடவர் தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.

