இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் முக்கிய மாநிலமாக திகழும் பஞ்சாப் மாநிலத்திற்கு மரியம் நவாஸ் முதல் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானை மூன்று முறை பிரதமராக ஆட்சி செய்த நவாஸ் ஷெரிப்பின் மகள் தான் மரியம் நவாஸ்.
50 வயதான மரியம் பஞ்சாப் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர். பொதுவாக பஞ்சாப் மாநிலத்தை ஆட்சி செய்பவர்களுக்கு நாட்டின் பிரதமராகும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படும்.
மரியம் நவாசை முதல் அமைச்சராக தேர்வு செய்வதன் மூலம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மரியம் சிறந்த பேச்சாளர் என்றும் அவரது மேடை பேச்சுகளால் மக்களை எளிதில் கவர்வார் என்றும் கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் செபாஷ் ஷெரிப் உள்ளார்.