செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் எரிசக்திப் பயன்பாடு அதிகரிப்பு

2 mins read
ffaaea23-af9d-4730-b8f5-152bddb0eabc
தரநிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியைப் பயன்படுத்தும் வழிகளை ஆராய்வதற்கு இப்போது அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. - படம்: கெப்பல் கார்ப்பரேஷன்

நியூயார்க்: உலகம் முழுதும் ஏராளமான தரவு நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அந்தத் தரவு நிலையங்களால் ஏற்படும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியைப் பயன்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

அவ்வகையில், உலகின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகல், சூரியன், காற்று வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெற்று தரவு மையங்களுக்குப் பயன்படுத்தும் புதிய உத்திக்கு வழிவகுத்துள்ளது.

இதன்மூலம் தரவு நிலையங்கள், இணைய மென்பொருளைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை எளிதில் பெறமுடியும். அதன்மூலம் அந்நிறுவனங்கள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு எரிசக்திப் பயன்பாட்டுக்கு ஆகும் செலவுகளையும் வெகுவாகக் குறைக்கலாம்.

தரவு நிலையங்களில் இயன்றளவு அதிகபட்சமாக புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியைப் பயன்படுத்துவது குறித்து கண்டறிவது மிக அவசியம் என்று கூகல் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைர்ரஸ் நெக்சஸ்,மைக்ரோசாப்ட், அமேசோன் ஆகிய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலான இணைய மென்பொருள்கள் உருவெடுத்துள்ளன. அவ்வகை மென்பொருள்களின் இயக்கத்திற்கு அதிகளவிலான எரிசக்தி தேவைப்படும். அதற்கு நவீன மென்பொருள்களின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியைப் பெற வேண்டும் என்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட எரிசக்திப் பயன்பாட்டுக்கு மாறவில்லையெனில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பெருக்கத்தால் பருவநிலையில் பெரும் மாற்றங்கள் நிகழக்கூடும். அதற்காக புதுப்பிக்கப்பட்ட எரிசக்திப் பயன்பாட்டுக்கு பெரும் அளவில் நிறுவனங்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இல்லையெனில், எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான பருவநிலை மாற்றங்களால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களால் தரவுநிலையங்களுக்கு ஆகும் எரிசக்திச் செலவினங்கள் ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகக்கூடும் என்று ‘என்விடியே’ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்