பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த பாலஸ்தீனப் பிரதமர்

3 mins read
1dc50e81-017a-4344-9373-25109b8828a0
பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ள பாலஸ்தீனப் பிரதமர் முகம்மது ஷ்டாய்யே. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துபாய்: பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாசிடம் பதவி விலகல் கடித்தைச் சமர்ப்பித்துவிட்டதாக பாலஸ்தீனப் பிரதமர் முகம்மது ஷ்டாய்யே பிப்ரவரி 26ஆம் தேதியன்று தெரிவித்தார்.

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்‌ரேல் போர் தொடுத்துள்ளதை அடுத்து, பாலஸ்தீனர்களுக்கான அரசியல் ஏற்பாடுகள் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான சூழல் அமைய இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

காஸாவில் வெடிதுள்ள போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், பாலஸ்தீன அரசாங்கத்தில் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் மஹ்முத் அப்பாசுக்கு அமெரிக்கா நெருக்குதல் அளித்து வருகிறது.

போருக்குப் பிறகு பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியை ஆட்சி செய்யத் தேவையான அரசியல் அமைப்பை உருவாக்கத் தொடங்குபடி அதிபர் அப்பாசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திரு ஷ்டாய்யே தமது பதவி விலகல் கடித்ததைச் சமர்ப்பித்துள்ளபோதிலும் அதை அதிபர் அப்பாஸ் ஏற்க வேண்டும்.

நிரந்தரப் பிரதமர் நியமிக்கப்படும்வரை இடைக்காலப் பிரதமராகத் தொடர அவர் திரு ஷ்டாய்யேவைக் கேட்டுக்கொள்ளக்கூடும்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் நிலவும் சர்ச்சைகள், பிரச்சினைகள், வன்முறை சம்பவங்கள் ஆகியவற்றுக்குப் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்‌ரேல் ஆக்கிரமித்திருப்பதே முக்கிய காரணம் என்று அனைத்துலக நீதிமன்றத்தில் துருக்கியின் துணை வெளியுறவு அமைச்சர் அகமது யில்டிஸ் தெரிவித்தார்.

இந்தக் காரணத்துக்குத் தீர்வு காணாவிடில் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது என்றார் அவர்.

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது குறித்து 50க்கும் அதிகமான நாடுகளிடமிருந்து ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆக உயரிய நீதிமன்றம் கருத்து சேகரித்து வருகிறது.

இஸ்‌ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து அனைத்துலக சட்ட அமைப்புகள் ஆராய வேண்டும் என்று பாலஸ்தீன அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரில் இஸ்‌ரேலிய ராணுவம் முழுவீச்சில் தாக்குதல் நடத்தினால் பேரளவில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைவர் அண்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஸாவுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் திட்டங்களுக்கு அது மரண அடியாக அமைந்துவிடும் என்றார் அவர்.

ராஃபா மீது முழுவீச்சில் நிலம் வழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு பிப்ரவரி 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து போரில் வெற்றி பெற இஸ்‌ரேல் இலக்கு கொண்டுள்ளது.

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் ராஃபா நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள 1.4 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட இருக்கும் பயங்கரம், அழிவு பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று திரு குட்டரஸ் கூறினார்.

அத்துடன் ஐநாவின் உதவித் திட்டங்கள் இனி அங்குள்ள பாலஸ்தீனர்களைச் சென்று அடையாத நிலை ஏற்பட்டுவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். இதற்கிடையே, இஸ்ரேலிய அதிகாரிகள் திங்களன்று, ஹமாஸின் அரசியல் அலுவலகம் அமைந்துள்ள கத்தாருக்குச் சென்றுள்ளதாக அறியப்படுவதா ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது. போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு குறித்த பேச்சு வார்த்தை அங்கு நடைபெற உள்ளது. போர் நிறுத்தத்தின் முதல் படி இது என்று வாஷிங்டன் குறிப்பிட்டுள்ளது. போர் நிறுத்தம் குறித்து இஸ்‌ரேலின் முக்கிய நட்புநாடான அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து காஸாவில் போர் வெடித்தது. அத்தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் இதுவரை குறைந்தது 29,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவ்வட்டார சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்