தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மார்ச் 1 முதல் ஜோகூர் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் உயரலாம்

2 mins read
83b8c9ad-11c6-4e4b-8d18-16f2f7d61fb3
வார இறுதி, நீண்ட பொது விடுமுறை, பள்ளி விடுமுறை ஆகிய நாள்களில் ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல்களில் அதிகமானோர் தங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

ஜோகூர் பாரு: மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்க கூடுதல் செலவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை, சேவை வரி 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக அதிகரித்துள்ளதால் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஹோட்டல்கள் சங்கத் ஜோகூர் கிளையின் உறுப்பினர்களாக இருக்கும் ஹோட்டல்கள், அவற்றின் அறைக் கட்டணங்களை 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து 20 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு வரை உயர்த்தியதாக சங்கத் தலைவர் திரு ஐவன் டியோ தெரிவித்தார்.

இதற்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணம் என்றார் அவர்.

“ஹோட்டல்களில் விருந்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். குறிப்பாக, ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல்களில் வாரநாட்களிலும் விடுமுறை நாள்கள் இல்லாத மற்ற நாள்களிலும் கூடுதல் விருந்தினர்கள் தங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு,” என்று திரு டியோ கூறினார்.

வார இறுதி, நீண்ட பொது விடுமுறை, பள்ளி விடுமுறை ஆகிய நாள்களில் ஹோட்டல்களில் அதிகமானோர் தங்குவதாக அவர் தெரிவித்தார்.

ஹோட்டல் அறைக் கட்டணங்கள் அதிகரிப்பால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனத் தாம் நம்புவதாக திரு டியோ தெரிவித்தார்.

ஹோட்டல் அறைக் கட்டண அதிகரிப்பு குறிப்பாக சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்குப் பிரச்சினையாக இருக்காது என்றார் அவர்.

இருப்பினும், இந்தோனீசிய சுற்றுப்பயணிகளை அது பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தோனீசிய ரூப்பியா-மலேசிய ரிங்கிட் நாணய மாற்று விகிதம் இதற்குக் காரணம் என்றார் அவர்.

ஆனால் சிங்கப்பூர் நாணயம் வலுவாக இருப்பதால் அவர்களை இந்தக் கட்டண உயர்வு அவ்வளவாக பாதிக்காது என்று திரு டியோ கூறினார்.

ஜோகூரில் உள்ள ஹோட்டல்களில் தங்குபவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்