துபாய்: காஸா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போர் நிறுத்தப் பரிந்துரை ஹமாஸ் அமைப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதை ஹமாஸ் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை ராணுவ நடவடிக்கைகளையும் 40 நாள்களுக்கு நிறுத்தி வைப்பது, இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்து பதிலுக்கு இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பாலஸ்தீனக் கைதிகளை ஹமாஸ் அமைப்பிடம் ஒப்படைப்பது (பத்து பாலஸ்தீனக் கைதிகளுக்கு ஓர் இஸ்ரேலியப் பிணைக்கைதி) ஆகியவை பரிந்துரையில் இடம்பெற்றிருப்பதாக பிப்ரவரி 27ஆம் தேதியன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள போர் நிறுத்த திட்டத்தின்கீழ், காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் பேக்கரிகளும் பழுதுபார்க்கப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் காஸா முனைக்குள் 500 லாரிகள் நுழைந்து அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்றும் வீடுகளை இழந்து தவிப்போருக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
40 இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரை அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களில் பெண்கள், 19 வயதுக்கும் குறைவான சிறுவர்கள், 50 வயதுக்கும் அதிகமான முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் அடங்குவர்.
இஸ்ரேல் ஏறத்தாழ 400 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கும் என்றும் அவர்களை அது மீண்டும் கைது செய்யாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
253 பேரை ஹமாஸ் பிணை பிடித்தது.
இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் மூண்டது.
காஸாவைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் மடிந்துவிட்டனர்.
இந்நிலையில், போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை உலக நாடுகளும் ஐநாவும் தீவிரப்படுத்தியுள்ளன.

