போதைப்பொருள் கலந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்த பெற்றோர் கைது

1 mins read
de127343-3563-4ea8-9584-9b6f06e68fa7
தவறுதலாகப் போதைப்பொருள் கலந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்ததை அக்குழந்தையின் தாய் ஒப்புக்கொண்டார். - படம்: அன்ஸ்பிளாஷ்

கோலாலம்பூர்: போதைப்பொருள் கலந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்ததாகக் கூறப்படும் அக்குழந்தையின் பெற்றோரிடம் மலேசிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் அத்தம்பதியின் அடுக்குமாடி வீட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நடந்தது என்றும் சம்பவத்தன்று அவர்கள் அளவுக்கு அதிகமாகப் போதைப் பொருள் உட்கொண்டிருந்தனர் என்றும் பெட்டாலிங் ஜெயா வட்டாரக் காவல்துறைத் தலைவர் ஷாருல் நிஜாம் ஜாஃபர் என்றழைக்கப்படும் இஸ்மாயில் மலேசிய ஊடகத்திடம் கூறினார்.

போதைப்பொருள் கலந்த பாலைத் தவறுதலாகத் தங்கள் குழந்தைக்குக் கொடுத்த பிறகு என்ன செய்வதென்று அறியாமல் அந்த 34 வயதான தாயும் 49 வயதான தந்தையும் தங்கள் 14 மாதக் குழந்தையை 15 கி.மீ., தொலைவில் இருக்கும் அதன் பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் அந்தப் பாட்டி தவித்ததாகவும் அப்போது தான் தவறுதலாகப் போதைப்பொருள் கலந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்ததை அந்தத் தாய் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறைத் தலைவர் ஷாருல் நிஜாம் கூறினார்.

உடனே அக்குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தன் பாட்டியின் பராமரிப்பில் தற்போது அக்குழந்தை இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் அக்குழந்தையின் பெற்றோர் பிப்ரவரி 20ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்