மலேசியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கில் முன்னாள் துப்புரவாளர் ஒருவர் 1 மில்லியன் ரிங்கிட் (S$281,000) வென்றுள்ளார்.
திரு முகம்மது நஸ்ரி அப்துல் வஸிர், 61, பல்லாண்டு காலமாக வங்கியில் பணத்தைச் சேமித்து வந்தார். ஆனால், தமது சேமிப்பின் விளைவாக 1 மில்லியன் ரிங்கிட் வெல்வோம் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவசரகாலத்துக்காக திரு நஸ்ரி வங்கிக் கணக்கில் பணத்தைச் சேமிக்கத் தொடங்கினார்.
கடந்த ஆண்டுதான் அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கெடுக்க அவர் முடிவெடுத்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
தாம் பரிசு வென்றதாக பிப்ரவரியில் வங்கி அதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது தாம் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக திரு நஸ்ரி சொன்னார்.
பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தம் 84 வயது தாயாரை சவூதி அரேபியாவின் மக்காஹ் நகருக்குப் புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக திரு நஸ்ரி பதிலளித்தார்.
எஞ்சிய பணத்தை தம் அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் போவதாக அவர் சொன்னார்.

