தென்கொரிய மருத்துவமனைகளுக்கு விரையும் ராணுவ மருத்துவர்கள்

2 mins read
31e3e2a8-59b8-4cc8-9c9b-39980f0db93f
வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தென்கொரிய மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையில் மருத்துவப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் முடிவெடுத்தது.

இதுகுறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் தென்கொரிய மருத்துவமனைகளில் பணிபுரியும் பல மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் மருத்துவமனைகளிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தென்கொரிய மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களில் மூன்றில் இருவர் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தென்கொரிய மருத்துவமனைகள் முடங்கின. பல முக்கிய சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்நாட்டில் மருத்துவ நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த சில நாள்களில் ராணுவ மருத்துவர்களும் சமூக மருத்துவர்களும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பர் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்பும்படி இளம் மருத்துவர்களை தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூ பிப்ரவரி 28ஆம் தேதியன்று கேட்டுக்கொண்டார்.

வேலைக்குத் திரும்ப அவர்களுக்கு பிப்ரவரி 29ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

“மருத்துவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்தும் வேலைச் சூழல் குறித்தும் கவலைப்படுவது அரசாங்கத்துக்குப் புரிகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று அரசாங்கக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஹான் தெரிவித்தார்.

இதற்கிடையே, பயிற்சி மருத்துவர்கள் பேரளவில் வெளிநடப்பு செய்ய ஊக்குவித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐவர்மீது தென்கொரியச் சுகாதார, மக்கள் நலன் அமைச்சு புகார் அளித்துள்ளது.

அவர்களது மருத்துவர் உரிமங்கள் ரத்து செய்யப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐவரும் கொரிய மருத்துவச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது.

தென்கொரிய அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்