வாஷிங்டன்: ஹூதி கிளர்ச்சிப் படைகளின் தரையிலிருந்து தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் மார்ச் 1ஆம் தேதியன்று தாக்கி நாசம் செய்துள்ளன.
அமெரிக்க விமானங்களுக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளபத்தியம் (சென்ட்காம்) தெரிவித்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஒற்றுமையைக் காட்ட விரும்புவதாக ஹூதி படையினர் அறிவித்துள்ளனர்.
ஏமனில் போரில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஈரான் ஆதரவு ஹூதிகள், நவம்பர் மாதம் முதல் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி வருகின்றன.
இந்த முக்கியமான நீர்வழிப்பாதையில் உலக நாடுகளுக்கு இடையிலான சரக்குக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. இதனால் இந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களைப் பாது காப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கடற்படைகள் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஹூதி வட்டாரங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
“மார்ச் 1ஆம் தேதி அன்று ‘தாக்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஈரான் ஆதரவு ஹூதி ஏவுகணைகளுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தியது,” என்று ‘சென்ட்காம்’ அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 1ஆம் தேதி இரவு ஹூதிகள், செங்கடலை நோக்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பாய்ச்சினர். ஆனால் எந்தவொரு கப்பல்களுக்கும் பாதிப்போ சேதமோ ஏற்படவில்லை என்று தளபத்தியம் கூறியது.
சென்ற பிப்ரவரியில் அமெரிக்கா, பிரிட்டிஷ் படைகள் கூட்டாகச் சேர்ந்து ஏமனில் உள்ள எட்டு ஹூதி இலக்குகளைத் தாக்கியதில் அதன் ஆயுதச் சேமிப்புக் கிடங்கு, தாக்கும் வானூர்திகள், ஆகாயத் தற்காப்பு முறைகள், ரேடார், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் எட்டுப் பேர் காயம் அடைந்ததாகவும் ஹூதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் பிப்ரவரி 25ஆம் தேதி தெரிவித்தது.