மலேசியாவில் ‘பேஸ்மேக்கர்’ பொருத்தியபின் நாடு திரும்பும் நார்வே மன்னர்

மலேசியாவில் ‘பேஸ்மேக்கர்’ பொருத்தியபின் நாடு திரும்பும் நார்வே மன்னர்

1 mins read
af35b66f-d1e2-47f8-8d6f-9ab3a759cea8
நார்வே மன்னர் ஹெரல்ட். - படம்: ராய்ட்டர்ஸ்

ஓஸ்லோ: நார்வே மன்னர் ஹெரால்ட், மார்ச் 3ஆம் தேதி மலேசிய மருத்துவமனையிலிருந்து, நோயாளிகளைக் கொண்டுசெல்ல உதவும் மருத்துவ விமானம் மூலம் நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காவி விமான நிலையத்திலிருந்து மலேசிய நேரப்படி பிற்பகல் 1.05 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது.

87 வயதாகும் மன்னர் ஹெரால்டிற்கு மலேசிய மருத்துவமனையில் சனிக்கிழமை (மார்ச் 2) தற்காலிகமாக இதயத்தில் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

தனிப்பட்ட முறையில் விடுமுறைப் பயணமாக லங்காவி சென்றபோது சென்ற வாரத் தொடக்கத்தில் அவருக்கு கிருமித்தொற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக நார்வே அரசகுடும்பத்தினர் கூறினர்.

“இதயத் துடிப்பு மெதுவாக இருந்ததால் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. மார்ச் 2ஆம் தேதி காலை அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டு, அந்த சிகிச்சை வெற்றிகரமக மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்று நார்வே அரண்மனை அறிக்கை கூறியது.

மன்னரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னருடன் அரசியார் சோன்ஜாவும் பயணம் செய்வதாகவும் நார்வே திரும்பியதும் மன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுப்பிலிருப்பார் என்று அரண்மனை அறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்