இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக செபாஷ் ஷரிஃப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு இரண்டாவது முறையாக அவர் பிரதமராகிறார்.
ஞாயிற்றுக்கிழமை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செபாஷ் ஷரிஃப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 72 வயதான செபாஷ் ஷரிஃப், பாகிஸ்தானை மூன்று முறை பிரதமராக ஆட்சி செய்த நவாஸ் ஷரிஃப்பின் சகோதரர்.
கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. அதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து செபாஷ் ஷரிஃப்பின் பி.எம்.எல்- என் கட்சியும் பிலாவால் பூட்டோவின் பி.பி.பி. கட்சியும் கூட்டணியாக இணைந்து அந்நாட்டில் ஆட்சி அமைப்பதாக அறிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மாத காலம் தற்காலிக அரசால் பாகிஸ்தான் ஆட்சி செய்யப்பட்டது.
தமது முந்தைய ஆட்சியில் செபாஷ் ஷரிஃப்பின் அரசாங்கம் அனைத்துலக பண நிதியத்திடம் நாட்டின் பொருளியல் சரிவை மீட்க உதவிகளை நாடியது. ஆனால், பலதரப்புப் பிரச்சினையால் உதவிகள் சரியாக கிடைக்கவில்லை.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் விரைவில் அனைத்துலக பண நிதியத்துடன் பேசி பாகிஸ்தானின் பொருளியலைச் சரிசெய்யும் என்று கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு, கலவரங்களுக்கிடையே நடந்த இந்த பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் குறைகூறிவருகின்றன.