கலிஃபோர்னியா: அமெரிக்காவின் மேற்பகுதியில் உள்ள நெவாடா, கலிஃபோர்னியா மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது.
அதனால், முக்கியமான சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
குறிப்பாக மலை பகுதியைக் கொண்ட சியரா நெவாடா பகுதியை பனிப்புயல் பதம் பார்த்தது. அங்கு மணிக்கு 305 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடித்தது.
பனிப்புயல் குறித்து அவ்வாட்டரங்களில் வாழும் மக்களிடம் ஏற்கெனவே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததாக அமெரிக்க வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
புயலால் கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரம் பனி குவிந்துள்ளது. அதனால் பனிச்சரிவுகளில் மக்கள் சிக்காமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாஹோ ஏரிக்கு அருகே வாழும் மக்கள் மிகக் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக யோஸ்மைட் தேசிய பூங்காவும் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களாக மூடப்பட்டது.
இந்நிலையில் டெக்சஸ் மாநிலத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.