சோல்: அமெரிக்க ராணுவத்தினரை தென்கொரியாவில் வைத்திருப்பது தொடர்பான செலவினப் பேச்சுவார்த்தைக்கு தென்கொரியாவும் அமெரிக்காவும் தத்தம் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.
இதை அவ்விரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) தெரிவித்தன.
இந்தப் புதிய ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டுதான் செயல்படத் தொடங்கும். எனினும், தென்கொரியா தனது தரப்புக்கு லீ டே வூ என்பவரையும் அமெரிக்கா தனது தரப்புக்கு திருவாட்டி லிண்டா ஸ்பெக்ட் என்பவரையும் விரைந்து நியமித்துள்ளன. இதற்கு அடுத்த அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெறக்கூடும் என்பதால் அதற்கு முன்னரே இரு நாடுகளும் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை ஓராண்டுக்கு மேல் நீடிக்கலாம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தென்கொரிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லிம் சூ சுக் தெரிவித்தார்.
“இரு நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுக்களும் ஆக்ககரமான முறையில் கலந்தாலோசனையில் ஈடுபட்டு ஒருங்கிணைந்த தற்காப்புக் கட்டமைப்பை உறுதிசெய்ய முயற்சி மேற்கொள்ளும். அது இருநாட்டுக் கூட்டணியை மேலும் வலுவாக்கும்,” என்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சும் கூட்டறிக்கையில் விளக்கம் அளித்தன.
எனினும், பேச்சுவார்த்தை எப்பொழுது தொடங்கும் என அவ்விரு நாடுகளும் தெரிவிக்கவில்லை.

