பிலடெல்ஃபியா: 34 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு அமெரிக்கரான திரு ரோனல்ட் ஜான்சன் மார்ச் 4ல் விடுவிக்கப்பட்டார்.
திரு ஜான்சன் குற்றமற்றவர் என்றும் அவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி, அவரை விடுதலை செய்ய பிலடெல்ஃபியா நீதிமன்றம் உத்தரவிட்டது.
61 வயது திரு ஜான்சனுக்கு எதிராக மீண்டும் வழக்கு விசாரணை நடத்தப்படாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் உறுதி அளித்தனர்.
அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
1990ஆம் ஆண்டில் திரு ஜோசஃப் கோல்ட்ஸ்பி என்பவரைக் கொலை செய்ததற்காக திரு ஜான்சனுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவர் அளித்த பொய் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக லாபநோக்கமற்ற பொதுமக்கள் நலன் சட்ட நிறுவனமான ஃபிலிப்ஸ் பிளாக் கூறியது.
திரு ஜான்சன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திடமிருந்து மறைத்ததாக திரு ஜான்சனின் வழக்கறிஞர் திருவாட்டி ஜெனிஃபர் மெரிகன் தெரிவித்தார்.
இதுபோன்ற அநியாயங்கள் பிலடெல்ஃபியா மாநிலத்திலும் அமெரிக்காவின் மற்ற பகுதிகளிலும் அதிகம் நடப்பதாக திருவாட்டி மெரின் குற்றம் சாட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் திரு ஜான்சன் குளித்துவிட்டு, தமக்குப் புதிய துணிகளை வாங்கிக்கொண்டார். பிறகு ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றுக்கொண்டார்.
தமது குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் உணவருந்தினார்.
வாழ்வின் புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்திருப்பதாக திரு ஜான்சன் தெரிவித்தார்.

