குடிநுழைவுச் சாவடிகளில் நெரிசலுக்கு உடனடி தீர்வுகாணுங்கள்: ஒன் ஹஃபிஸ்

குடிநுழைவுச் சாவடிகளில் நெரிசலுக்கு உடனடி தீர்வுகாணுங்கள்: ஒன் ஹஃபிஸ்

2 mins read
190d12d7-2540-4ecb-8a47-ae3170cedb27
எம்பைக் முறையில் ஏற்பட்ட கோளாற்றால் மோட்டார்சைக்கிளோட்டிகள் அவதிக்கு ஆளாயினர். - படம்: தி ஸ்டார்
multi-img1 of 2

ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான மலேசியாவின் இரண்டு எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஏற்படும் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வுகாணுமாறு ஜோகூர் முதலமைச்சர், அந்நாட்டின் குடிநுழைவுப் பிரிவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர்-ஜோகூர் காஸ்வே கடற்பாலம் இருக்கும் எல்லைப் பகுதியில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் (பிஎஸ்ஐ), துவாஸ் இரண்டாம் இணைப்புப் பகுதியில் இருக்கும் சுல்தான் அபு பாக்கார் நிலையம் (கேஎஸ்ஏபி) ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் பற்றி திரு ஒன் ஹஃபிஸ் காஸி பேசினார். இரண்டு சோதனைச் சாவடிகள் வழியாகவும் பயணம் செய்யும் ஜோகூர்வாசிகளின் சார்பில் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாணுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“மக்கள் இப்படி அவதிப்படக்கூடாது. இன்னும் எத்தனை காலம்தான் அவர்கள் இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகவேண்டும்,” என்று திரு ஒன் ஹஃபிஸ் கேட்டார். ஜோகூருக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க தற்போது அவர் சீனாவின் ‌ஷென்ஸன் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

“குறிப்பாக நான் சீனாவில் இருக்கும் இவ்வேளையில் இந்தப் பிரச்சினை தொடர்வது வருத்தம் தருகிறது. செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலால் சாதாரண மக்கள் சிரமத்தை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை எண்ணி நான் வருந்துகிறேன். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணுமாறு நான் வேண்டுகிறேன்,” என்று திரு ஒன் ஹஃபிஸ் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.

மோட்டார்சைக்கிள்களுக்கான ‘எம்பைக்’ எனும் குடிநுழைவுச் சாவடி முறையில் அண்மையில் கோளாறு ஏற்பட்டது. அதனால் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணம் மேற்கொள்ளும் மோட்டர்சைக்கிளோட்டிகள் மோசமான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டனர்.

பிஎஸ்ஐ, கேஎஸ்ஏபி இரண்டிலும் சோதனைச் சாவடிகளைக் கடக்க மோட்டார்சைக்கிளோட்டிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாநெரிசல்சிங்கப்பூர்