லிமா: பெரு பிரதமர் ஆல்பர்ட்டோ ஒட்டாரோலா பதவி விலகியுள்ளார்.
தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு பெண்ணுக்கு அதிக மதிப்புள்ள அரசாங்கக் குத்தகைகளை அவர் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து திரு ஒட்டாரோலா பதவி விலகினார்.
57 வயது ஒட்டாரோலா தாம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று கூறி வருகிறார். அப்பெண்ணுக்கும் அவருக்கும் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் உரையாடலின் ஒலிப்பதிவுகளை பெருவிய தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து அதிகாரபூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
‘பெனரோமா’ என்ற நிகழ்ச்சியில் அந்த உரையாடலின் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதில் திரு ஒட்டாரோலா, 25 வயது யாஸிரே பினெுடோவுடன் பேசிக்கொண்டிருந்ததாக அந்நிகழ்ச்சி தெரிவித்தது.
பெருவின் தற்காப்பு அமைச்சில் சில பணிகளை மேற்கொள்ள திருவாட்டி பினெவிற்கு இரண்டு குத்தகைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவற்றின் மூலம் அவர் 53,000 சொல் (18,816 வெள்ளி) ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

